Apr 7, 2012

அப்படி என்னதான் வேலை

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் 
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" – 

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. 

நானும் விவரிக்க ஆரம்பிதேன். 

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். 
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல 
இருந்தே செய்யணும். 
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய 
தயாரா இருக்கான்." 

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்". 

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, 
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். 
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. 
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம். 

"சரி" 

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க 
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". 

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. 

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? 

அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை. 

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"? 

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க." 

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு 
எதுக்கு MBA படிக்கணும்?" – 

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?" 

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் 
இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள 
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. 
இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு 
ப்ராஜெக்ட் கிடைக்கும்" 

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 
நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் 
முடிக்க முடியாதே?" 

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க 
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். 

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் 
தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. 
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். 
அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, 
எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான். 

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார். 

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே 
"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம். 

"CR-னா?" 

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க 
வேலை பார்த்துட்டோம். 
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு 
சொல்லுவோம். 
இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்." 

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது. 

"இதுக்கு அவன் ஒத்துபானா?" 

"ஒத்துகிட்டு தான் ஆகணும். 

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?" 

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?" 

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். 
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. 
இவரது தான் பெரிய தலை. 
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு." 

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் 
தெரியும்னு சொல்லு." 

"அதான் கிடையாது. 

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது." 

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" – 

அப்பா குழம்பினார். 

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் 
ஆகுறது தான் இவரு வேலை." 

"பாவம்பா" 

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. 
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?" 

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. 
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை 
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை." 

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!" 

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு 
நிறைய அடி பொடிங்க இருப்பாங்க." 

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா 
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?" 

"வேலை செஞ்சா தானே? 
நான் கடைசியா சொன்னேன் பாருங்க... 
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" 
சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி 
தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க." 

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? 
அவங்களுக்கு என்னப்பா வேலை?" 

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது 
இவனோட வேலை. 

புடிக்காத மருமக கை பட்டா குத்தம், 
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி." 

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? 
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. 
சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?" 

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, 
அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு 
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை 
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க" 

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? 

ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?" 

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே 
காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்." 

"எப்படி?" 

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. 
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, 
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." 
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். 
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, 
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்". 

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய 
கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?" 

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம 
தான் இருக்கணும்." 

"அப்புறம்?" 

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான 
ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க 
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்." 

"அப்புறம்?" 

"அவனே பயந்து போய், 
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு 
பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" 

புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." 
இதுக்கு பேரு "Maintenance and Support". 
இந்த வேலை வருஷ கணக்கா போகும். 
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு 
கூட்டிட்டு வர்றது மாதிரி. 

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு 
புரிய ஆரம்பிக்கும். 

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா"

பெண்

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்.

(i) பேதை (Pethai):
Girl between the ages of 5 to 8; 
மகளிர்பருவம் ஏழனுள் 5 முதல் 8 வயதுவரையுள்ள பெண். 
...
(ii) பெதும்பை (Pethumpai):
Girl between the ages of 9 and 10;
9 முதல் 10 வயதுவரையுள்ள பெண்.

(iii) மங்கை (Mangai):
A girl between 11 and 14 years;
11 முதல் 14 வயது வரை உள்ள பெண்.

(iv) மடந்தை (Madanthai):
Woman between the ages of 15 and 18;
மகளிர்பருவம் ஏழனுள் 15 முதல் 18 வயதுவரை யுள்ள பருவத்துப் பெண்.

(v) அரிவை (Arivai):
Woman between the age of 19 and 24;
19 வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண்.

(vi) தெரிவை (Therivai):
Woman between 25 and 29 years of age;
25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்.

(vii) பேரிளம்பெண் (Perilampenn):
Woman between the ages of 30 and 36;
எழுவகைப் பருவமகளிருள் 30 வயதுக்கு மேல் 36 வயதுவரையுள்ள பெண்.

Apr 5, 2012

மலர்கள்

சங்கப்பாட்டில் 99 வகையான மலர்கள்:

பத்துப்பாட்டு தொகுப்பில் ஒரு பகுதி குறிஞ்சிப் பாட்டு ஆகும். இந்த நூல் கபிலரால் எழுதப்பட்டது. மேலும், இது காதலர்கள் மேற்கொள்ளும் நீண்டதூரப்பயணத்தை பற்றியதாகும்.

இந்நூலில் 99 வகையான மலர்களை பற்றிய குறிப்புகள் உண்டு. இந்த நூல் குறிஞ்சி பகுதியின் வளத்தை எடுத்துரைக்கும் என்றாலும், அனைத்து திணை மலர்களையும் சொல்கிறது. இதன் மூலம் சங்ககாலம் முதலே தமிழகத்தில் எண்ணற்ற மலர்கள் உண்டு என்பதை அறியலாம். அந்த மலர்களின் பெயரை தந்துள்ளேன்.

(1) காந்தள்
(2) ஆம்பல்
(3) அனிச்சம்
(4) குவளை
(5) குறிஞ்சி
(6) வெட்சி
(7) செங்கோடுவேரி
(8) தேமாம்பூ
(9) மணிச்சிகை
(10) உந்தூழ் (பெருமூங்கில்)
(11) கூவிளம் (வில்வம்)
(12) எறுழம்
(13) கள்ளி
(14) கூவிரம்
(15) வடவனம்
(16) வாகை
(17) குடசம் (வெட்பாலை)
(18) எருவை (கோரை)
(19) செருவிளை (காக்கணம், சங்கு)
(20) கருவிளை
(21) பயினி
(22) வாணி (ஓமம்)
(23) குரவம்
(24) பசும்பிடி (இலமுகிழ்)
(25) வகுளம் (மகிழம்)
(26) காயா
(27) ஆவிரை
(28) வேரல் (சிறு மூங்கில்)
(29) சூரல்
(30) பூளை
(31) கன்னி (குன்றி மணி)
(32) குருகிலை (முருங்கிலை)
(33) மருதம்
(34) கோங்கம்
(35) போங்கம்
(36) திலகம்
(37) பாதிரி
(38) செருந்தி
(39) அதிரல் (புனலி)
(40) சண்பகம்
(41) கரந்தை
(42) குளவி (காட்டுமல்லிகை )
(43) கலிமா
(44) தில்லை
(45) பாலை
(46) முல்லை
(47) குல்லை
(48) பிடவம்
(49) மாறோடம்
(50) வாழை
(51) வள்ளி
(52) நெய்தல்
(53) தாழை (தென்னம்பாளை)
(54) தளவம்
(55) தாமரை
(56) ஞாழல்
(57) மொவ்வல்
(58) கொகுடி
(59) சேடல் (பவளமல்லிகை)
(60) செம்மல்
(61) செங்குரலி
(62) கோடல்
(63) கைதை (தாழை)
(64) வழை (சுரபுன்னை)
(65) காஞ்சி
(66) நெய்தல்
(67) பாங்கர்
(68) மரா (கடம்பு)
(69) தணக்கம் (நுணா)
(70) ஈங்கை
(71) இலவம்
(72) கொன்றை
(73) அடும்பு
(74) ஆத்தி
(75) அவரை
(76) பகன்றை
(77) பலாசம்
(78) பிண்டி
(79) வஞ்சி
(80) பித்திகம்
(81) சிந்துவாரம் (நொச்சி)
(82) தும்பை
(83) துழாய் (துளசி)
(84) தோன்றி
(85) நந்தி (நந்தியாவட்டம் )
(86) நறவம்
(87) புன்னாகம்
(88) பாரம் (பருத்தி)
(89) பீரம் (பீர்க்கு)
(90) குருக்கத்தி
(91) ஆரம் (சந்தனம்)
(92) காழ்வை (அகில்)
(93) புன்னை
(94) நரந்தம் (நாரத்தம்)
(95) நாகம்
(96) நள்ளிருள் நாறி (இருவாட்சி)
(97) குருந்து (காட்டு எலுமிச்சை)
(98) வேங்கை
(99) புழகு (மலை எருக்கு)

நன்றி!